நாகை: சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம்

74பார்த்தது
கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, பெற்றோரை இழந்த நாகை அருகேயுள்ள கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தையையும், வேளாங்கண்ணியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தையையும், அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். இரண்டு குழந்தைகளையும் நாகை அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்க அவர் உத்தரவிட்டார். 

வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சௌமியா என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா எனவும் அவர் பெயர் சூட்டினார். இக்குழந்தைகள் ராதாகிருஷ்ணனை அப்பா என்றும் அவரது மனைவி கிருத்திகாவை அம்மா என்றும் அழைத்தனர். இந்நிலையில், சௌமியாவும், மீனாவும் 18 வயது எட்டியதால் காப்பகத்தில் தங்குவதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. இதனால், ராதாகிருஷ்ணன் அனுமதியோடு, நாகை கடற்கரைச் சாலையில் உள்ள மலர்விழி மணிவண்ணன் தம்பதியினர் சௌமியாவையும், மீனாவையும் தத்தெடுத்து வளர்த்தனர். 

பி.ஏ. பட்டதாரியான சௌமியாவிற்கு திருமணம் முடிந்த நிலையில், மீனாவிற்கு நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில், தற்போது தமிழக உணவுத்துறை செயலராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
Job Suitcase

Jobs near you