நாகை வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில் பணத்தால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டபடியும், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் பணப்பந்தலால் ஜொலித்தன.
மேலும், சிவலிங்கத்திற்கு தங்க காசுகளால் அலங்காரம் செய்தும், பிரகாரம், கருவறை ஆகிய பகுதிகளில் 10, 20, 100, 200, 500 என 5 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் வரை பயன்படுத்தி பணப்பந்தல் அமைக்கப்பட்டும் ஐம்பொன் காசுகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ரூ.5 லட்சம் மதிப்பில் ஸ்ரீ சத்குரு சம்கார சுவாமிகளுக்கு பண அலங்காரம் செய்யப்பட்டு, தங்க காசுகள் தங்கமுலாம் பூசப்பட்ட டாலர்கள் காயின்கள் ஆகியவை வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பங்களிப்போடு ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் பணத்தை மீண்டும் இரண்டு நாட்களில் பக்தர்களிடமே வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் சத்குருவின் உருவப்படமும், ஐந்து ரூபாய் நாணயங்களும் வழங்கப்பட்டன.