நாகை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும், பேருந்து நிறுத்தம் அமைக்கவேண்டும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஒன்றிய அரசின் பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய மாணவ மாணவிகள் அங்கவன்வாடி முதல் பல்கலைகழகம் வரை கல்விக்கான நிதியை குறைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினர். மாணவர்களின் நலனை கருதாமல் அங்கன்வாடி குழந்தைகளின் உணவுக்கான நிதியை குறைத்தும், பல்கலைகழக மானியக்குழுவிற்கு ஒதுக்கப்பட்ட பலகோடி ரூபாய் நிதி வெட்டப்பட்டு இருப்பதாகவும், சாதாரண மாணவர்களுக்கு கைகொடுக்கும் அரசு பள்ளிகளின் சத்துணவுக்கான நிதியை குறைத்தும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.