நாகப்பட்டினம் மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தில் தொழிற்கடன் பெற்று தொழில் துவங்கி பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் கைவினை கலைஞர்களை உருவாக்கும் நோக்கத்திலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் "கலைஞர் கைவினைத் திட்டம்" (முமுவு) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்கள் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு "கலைஞர் கைவினைத் திட்டம்" மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ரூ. 3.00 இலட்சம் வரை பிணையற்ற வங்கி கடன் உதவி மற்றும் அதிகபட்சமாக ரூ. 50,000/- வரை மானியம் பெறலாம். 5% வரை வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன்மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராகவும், எந்த வகுப்பினராகவும் இருக்கலாம்.