நாகூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கோலாகலம் ; ஏராளமான குழந்தைகள் அம்பேத்கர் வேடமிட்டு அசத்தல்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை சமத்துவ நாளாக தமிழக அரசு அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அடுத்த நாகூர் அமிர்தா நகர் பகுதியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அம்பேத்கர் வேடமிட்டு அசத்தினர். மிடுக்கான உடையில் அம்பேத்கர் போல கோட் சூட் அணிந்து, கையில் இந்திய அரசியலமைப்பு புத்தகம் மற்றும் கண்ணாடியை போட்டவாறு அசத்திய குழந்தைகளை பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளின் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகை பகுதியை சேர்ந்த சிறுவன் கெவின் சிலம்பம் சுற்றியும், நாகூர் பகுதியை சேர்ந்த நரேஷ் ஆகியோர் கானா பாடல் பாடியும் அசத்தினர்.