நாகையில் அரசால் தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடவடிக்கை:
நாகப்பட்டினம் தோனித்துறை ரோடு, புது தெரு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும தலைமையகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது சி எஸ் ஐ கல்லறை அருகில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து பதப்படுத்துவதற்காக 12 பிளாஸ்டிக் பெட்டிகளில் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கடல் அட்டைகளை போலீசார் கைப்பற்றினார். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மேல் நடவடிக்கைக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் கடல் அட்டையை பதப்படுத்தியது யார்? அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வனத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.