நாகை ஸ்ரீமகா மாரியம்மன் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 108 குத்து விளக்கு பூஜை: திரளான பெண்கள் குத்துவிளக்கேற்றி பிரார்த்தனை.
நாகப்பட்டினத்தை அடுத்த மஞ்சகொல்லை ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீஉச்சமா காளியம்மன், ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பங்குனி பெருவிழா கடந்த 23ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நாள்தோறும் சாமிகளுக்கு அபிஷேகம், தீபாரதனை நிறைவு பெற்று சர்ப்ப வாகனம், அன்ன வாகனம், மயில்வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 108 திருவிளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனையோடு குத்துவிளக்கு ஏற்றி குத்து விளக்கை அம்பாளாக பாவித்து வேத மந்திரங்கள் முழங்க குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்பாளுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. எதிர் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.