நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. அடுத்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு விழா கோலாகலமாக தொடங்குகிறது.
லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் திருவிழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலை துறையினர், வருவாய்த் துறையினர் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு எதிரில் பொது இடங்களை ஆக்கிரமித்து இருந்த மெழுகுவர்த்தி கடை, பழக்கடை, ஜூஸ் கடை, ஹோட்டல்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.
மாதா கொடி ஊர்வலம் மற்றும் தேர் வரும் பகுதியான கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் கடை உரிமையாளர் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.