நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயிலில் மார்கழி மாத கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், உத்தராபதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.