அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இச்சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சீமான் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் போலீசார் கைது செய்தனர்.