மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் டேனிஷ் ஆட்சிக்காலத்தின்போது, 1620-ஆம் ஆண்டு டென்மார்க் கட்டடக் கலைநுணுக்கங்களுடன் டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டையைக் காண தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், டேனிஷ் கோட்டை கடலரிப்பால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே, கடலரிப்பிலிருந்து பாதுகாக்க இரண்டு முறை கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் கடல் அலையில் சேதமடைந்த நிலையில், கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை மூலம் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரும் தற்போது சேதமடைந்து வருகிறது.
உலகிலுள்ள மிகப் பழமையான கடற்கரை நகரங்களில் ஒன்றான தரங்கம்பாடியின் அடையாளச் சின்னமாக விளங்கக்கூடிய டேனிஷ் கோட்டையைப் பாதுகாக்கும் விதமாக ஏற்கெனவே தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் முதல் அமைக்கப்பட்டுள்ள கருங்கற்கள் தடுப்புச் சுவரை, டேனிஷ் கோட்டையைத் தாண்டி நீட்டித்து அமைக்க வேண்டும் என்று தரங்கம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பேரூராட்சித் துணைத் தலைவருமான பொன். இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது ரூ.3.63 கோடியில் டேனிஷ் கோட்டையைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன் கோட்டையைச் சுற்றிக் கருங்கற்கள் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.