நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் மோகன் காந்தி (வயது 54). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி வேம்பு (வயது 52). இவர் துறையூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 31) அதிகாலையில் இவரின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து சேதப்படுத்தி தப்பிச்சென்று உள்ளார். காலை தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்த மோகன் காந்தி வீட்டில் பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மோகன் காந்தி திட்டச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பொருட்களை அடித்து சேதப்படுத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் ஆட்கள் நடமாட்டம் இருந்த வேளையில் வீட்டில் பொருட்களை மர்ம நபர் சேதப்படுத்தும் கண்காணிப்பு கேமரா பதிவுகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.