தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி சொன்ன விதமும் அளித்த பதில்களும் அரசியல் விமர்ச்சகர்கள், செயற்பாட்டாளர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகி இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேற்று முதலே அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இதில் ஸ்டாலின், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து அளித்த பதில்களில் மத்திய அரசு என பொருள்படும் 'Central Government' என்று குறிப்பிடாமல் ‘கூட்டாட்சி மற்றும் ஒன்றிய அரசு’ என பொருள்படும் Union Government என்று குறிப்பிட்டதும், Federal போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதும் கவனம் ஈர்த்துள்ளது. இதனால் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில், இது பல கூட்டாட்சி கொண்ட ஐக்கிய நாடு என்பதை நினைவு கூறும் வகையில் ஸ்டாலின் மிகவும் கவனமாக தனது பதில்களை பதிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் அக்கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர்
அதேபோல எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவிக்கும்போது தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவிக்கையில் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல கமல் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும்போதும் ஆலோசனை வழங்குமாறு கேட்டிருந்தார். தொடர்ந்து பல்வேறு தேசியத் தலைவர்களும் வாழ்த்துகளைக் கூற ஒவ்வொருவருக்கும் பதில் அனுப்பிய ஸ்டாலின், அனைத்து ட்விட்டிலும் சமூக நீதி, மதச்சார்பின்மை, சம உரிமை, மாநில சுயாட்சி போன்ற வார்த்தைகளையே பயன்படுத்தினார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்திருந்தாலும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பதவியேற்பு நிகழ்ச்சியை எவ்வளவு எளிமையாக நடத்த முடியுமோ அந்தளவுக்கு எளிமையாக நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்ததும் பெரும்பாலோனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் வார்த்தைகள், அவரின் கொள்கைப்பிடிப்பு, அணுகுமுறை கடைசிவரை தொடருமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தாலும் தற்போதைய நடவடிக்கைகள் பலரிடம் பாசிட்டிவ் கமெண்ட்களை அள்ளியுள்ளது.