மதுரை மாவட்டம், எழுமலை எம். கல்லுப்பட்டி அருகே எம். எஸ். புரத்தைச் சேர்ந்த ராமர் -- வனத்தாய் தம்பதியரின் மகன் இன்பராஜா, (26) என்பவர் கடந்த 2016ல் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் அசாம் மாநிலத்தில் நிஜாம்பள்ளி முகாமில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று (டிச. 22) மதியம் ராணுவ வீரர்களுக்கான உணவு எடுத்து, ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது மலைப்பகுதி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இன்பராஜா உயிரிழந்தார். இவருக்கு, ஏழு மாதங்களுக்கு முன்பு தான் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவரது உடல் சொந்த ஊருக்கு ஒரு சில தினங்களில் கொண்டு வரப்படும் என தெரிகிறது.