மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழக்குயில்குடி அருகே உள்ள தட்டானூர் அருள்மிகு பொன் மகா முனியாண்டி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை கிடாவெட்டி விருந்து வைப்பதாக வேண்டிக் கொள்கிறார். அதனை தொடர்ந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் திருவிழா சமயங்களில் கிடா வெட்டி பக்தர்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 10) சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாக்கள் பக்தர்களின் நேர்த்திக் கடனாக வெட்டப்பட்டு 5 ஆயிரம் பேர் கலந்துகொண்ட மெகா அன்னதான உணவு விருந்து நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தனக்கன்குளம், கீழக்குயில்குடி, விளாச்சேரி, வடிவேல்கரை, நாகமலை புதுக்கோட்டை மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பேர் வந்து சாமி தரிசனம் செய்து கறி விருந்தில் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பொன் மகா முனிஸ்வரர் கோயில் பூசாரி சீட்டு என்ற கண்ணன் மற்றும் கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.