மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு உள்பட பல்வேறு உள்கட்ட அமைப்பு பணிகளை நிறைவேற்றும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் எலியார் பத்தி டோல்கேட் முதல் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடைவிதித்தது.
எலியார் பத்தி சுங்க சாவடி நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையாணையை மீறி சுங்க கட்டணத்தை நிர்வாகம் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமுக நல அமைப்புகள் எதிர்ப்பினால் சுங்க கட்டண விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இதனை தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் சுங்க கட்டண ரத்து உத்தரவு நகல் எலியார்பத்தி டோல் கேட் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (ஜூன். 4) நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு கட்டணம் இன்றி சேவை வழங்கப்படுகிறது.
நேற்று முன் தினம் மதுரை எலியார் பத்தி சுங்க கட்டணம் வசூலிக்க நீதிமன்ற தடை உத்தரவு நகல் வரும் வரை கட்டணம் வசூல் தொடரும் என்று கூறி எலியார் பத்தி சுங்க சாவடி நிர்வாகம் அறிவித்து கட்டணம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.