மதுரை அருகே அரியமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியின் மகன் கிளாமர் காளீஸ்வரன்(35) என்ற பிரபல ரவுடி பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது மதுரை கீரைத்துறை, தெப்பகுளம் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கிளாமர் காளி கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டம் திருமங்கலம் - சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வெண்கல மூர்த்தி நகரில் தனது இரண்டாவது மனைவி மீனாட்சி வீட்டில் இருந்து வந்துள்ளார்.
நேற்று (மார்ச். 22) இரவு 9 மணி அளவில் மனைவி மீனாட்சியிடம் தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி வெளியில் வந்த கிளாமர் காளீஸ்வரன் வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்தபோது திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் கிளாமர் காளியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இருள் சூழ்ந்த பகுதி என்பதால் கொலை கும்பல் யார் என்ற அடையாளம் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. போலீசார் இறந்த கிளாமர் காளியின் உடலை கைப்பற்றி ஆஸ்டின்பட்டி போலீசார் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவர் முன்னாள் திமுக மண்டல செயலாளர் வி கே குருசாமியின் ஆதரவாளர் என்பதும் பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.