மதுரை மாநகர் பகுதிகளான விளாங்குடி, வள்ளுவர்காலனி, மீனாட்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற நிலையிலும், முக்கிய பகுதிகளில் ஏராளமான வாகனங்களும் திருடப்படும் நிலையில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் WEEKEND MASS சோதனை என்ற பெயரில் மாநகர் முழுவதும் துப்பாக்கி ஏந்திய 30 காவல்துறை குழுவினர் 56 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆயுதங்களுடன் சுற்றிதிரிவது, போதைப்பொருள் விற்பனை, கொள்ளை சம்பவங்கள், பைக் ரேஸ் போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் தேர்தல் காலகட்டங்களில் உள்ள நடைமுறை போல முக்கிய சந்திப்புகளில் காவல்துறை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 10 காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புடன் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
வார இறுதி நாட்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக மதுரை மாநகர காவல்துறை சார்பில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் பகுதிகளில் முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் ஏற்கனவே அதிகளவில் நடைபெற்ற பகுதிகள் மற்றும் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.