மதுரை மாநகர் பீ. பி. குளம் முல்லை நகர் , நேதாஜிமெயின்ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தேர்தல் காலத்தில் எம் எல் தங்கள் பகுதிக்கு பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி அரசை கண்டித்தும் முல்லை நகர் பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை தொடங்கி 3ஆவது நாளாக தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடங்கிய பொதுமக்கள் தெருக்களில் சமைத்து உண்டு தங்கும் போராட்டத்தில் தொடங்கி நடத்தி வருகின்றனர். மேலும் ராணுவத்தினருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட குடியிருப்புக்கான உத்தரவு மற்றும் குடியிருப்புகளுக்கான படங்களை சுவரொட்டிகளாக முல்லை நகர் பகுதி முழுவதிலும் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது தலைகளில் கருப்பு துண்டால் முக்காடு போட்டபடி ஒப்பாரி வைத்தும், தூக்குகயிறை கழுத்தில்மாட்டியபடி அழுதும் நூதன முறையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.