மதுரை, தல்லாகுளத்தைச் சோ்ந்த செந்தாமரைச்செல்வி தாக்கல் செய்த மனு:
போலியோவால் இடது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான நான், மாட்டுத்தாவணி நெடுஞ்சாலையில் பிரபல தனியாா் மருத்துவமனை அருகே சாலையோர பெட்டிக்கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தேன். இதை பரிசீலித்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு அந்த இடத்தில் சாலையோரக் கடை வைக்க அனுமதி அளித்தனா். இதன்படி பல லட்சம் ரூபாய் செலவிட்டு, அந்த இடத்தில் கடையைத் தொடங்கினேன். இதற்கான வாடகையை நெடுஞ்சாலைத்துறையிடம் செலுத்தி வந்தேன். இந்த நிலையில், கடையின் உரிமத்தை புதுப்பித்து தராமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனா்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது கடையின் உரிமம் போலியானது என எதிா்தரப்பில் பொய் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், எனது கடையின் உரிமத்தை புதுப்பிக்கும் மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் உரிமம் புதுப்பித்து தரப்பட வில்லை. எனவே, கடை உரிமத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதுப்பித்து தர உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒத்தக்கடை முதல் மதுரை மாவட்ட நீதிமன்றம் வரை சாலையோரக் கடைகள் எத்தனை உள்ளன? இதுகுறித்து நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.