புத்தாண்டு தினத்தையொட்டி மதுரை மாநகரில் நடைபெறும் கொண்டாட்டங்களில் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு (டிச. 31) மதுரை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்களில் குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின்பேரில், துணை ஆணையர்கள் தலைமையில் அனைத்துச் சரக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் காவல் துறையிடம் கட்டாயம் முன் அனுமதி பெற்றே நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மேல் கண்டிப்பாக எந்த கொண்டாட்டமும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.