மதுரை மத்திய சிறைச்சாலையில் 2500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் உள்ளனர். நிலையில் சிறையில் உள்ள சிறைவாசிகள் செல்போன் போதை பொருட்கள் எதுவும் வைத்துள்ளார்களா? என்பது குறித்து அவ்வப்போது சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மதுரை மத்திய சிறை வளாகத்தில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் , புகையிலை, சிகரெட், செல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மதுரை மாநகர் காவல்துறைக்கு உட்பட்ட 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 100 காவலர்கள் கொண்ட காவல்துறை குழுவினர் காலை 5. 30 மணி முதல் 8. 30 மணி வரை தொடர்ச்சியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை மத்திய சிறை டிஐஜி முருகேசன், சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோரும் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மத்திய சிறையில் உள்ள பெண் சிறைவாசிகள் பிரிவு உட்பட 2500க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள் மற்றும் வளாகங்கள் உணவு தயாரிக்கும் பகுதிகளில், கைதிகள் மற்றும் சிறை அலுவா்கள் பயன்படுத்தப்படும் அறைகள் , உணவுக்கூடங்கள், கழிவறைகள், தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மத்திய சிறையில் திடீரென நடைபெற்ற சோதனையால் சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனையில் போதைப்பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.