எந்தவொரு நபரும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் NK 48 திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ரூபாய் ஒரு லட்சம் வரை எவ்வித கட்டணமுமின்றி உயிர்காக்கும் அனைத்து சிகிச்சைகளும் பெற இயலும், தற்போது இத்திட்டத்தின் வரவேற்பு காரணமாக கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை மருத்துவமனையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் ஒரு லட்சமாக இருந்த தொகை தற்பொழுது இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், இத்திட்டம் துவக்கியதிலிருந்து அரசு இராஜாஜி மருத்துவமனை தமிழகத்திலேயே முதலிடம் பெற்று சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த சாதனைக்காக அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் சரவணக்குமாருடன் நானும் விழாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டேன்.
மேலும் இந்த திட்டத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் 24 × 7 மணி நேரமும் சிறந்த முறையில் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றி வருகிறார்கள். மேலும் இத்திட்டத்தினை விரைவாக செயல்படுத்தும் நோக்கில் நேரடி மேற்பார்வையில் 6Data Entry Operator-களைக் கொண்டு தனி குழு பணியமர்த்தப்பட்டு செயல்படுகிறது என்றார்.