மதுரை: ஆன்லைன் பட்டாகளை விசாரிக்காமல் நிராகரிக்க கூடாது

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அரசியார்பட்டியைச் சேர்ந்த கோமதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "அரசியார்பட்டியில் உள்ள என் சொத்துக்கு பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை நிராகரித்து ராஜபாளையம் வட்டாட்சியர் கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு வருவாய் அதிகாரிகள் என்னை விசாரிக்கவில்லை. ஆவணங்களைக் கேட்கவில்லை. எனவே, வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்" என்றார். இந்த மனு நீதிபதி பி. பி. பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு, "மனுதாரரை விசாரிக்காமல், அவரது ஆன்லைன் பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனால், மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது.

 வட்டாட்சியர் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களைப் பரிசீலித்து, 8 வாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்காலத்தில் பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வருவாய் அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும். எனவே, இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்பிவைக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி