மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இது போன்று குப்பைகளை அள்ளுவது, வாகனங்களில் ஏற்றுவது போன்ற தூய்மை பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு கையுறை, பாதுகாப்பு முக கவசம் உள்ளிட்டவைகள் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பை தொட்டிகளில் அருகிலேயே குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்படுவதால் குப்பைகள் மழை நீரோடு தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஒயின்ஷாப், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின் அருகேயுள்ள குப்பைதொட்டிகளில் அருகிலயே குப்பைகளில் மதுபோதை ஆசாமிகளும், பயணிகளும் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் இதுபோன்று குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு போதிய கையுறைகள் வழங்கப்படாத நிலையில் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கேரிபேக்குகளை கையுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கடுமையான துர்நாற்றம் வீசும் நிலையில் குப்பைகளை அகற்றும் போது தூய்மைப் பணியாளர்களுக்கான முக கவசம் இல்லாத நிலையில் துர்நாற்றத்தை சுவாசித்தபடி தூய்மைப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.