மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி நடுவதற்கு அனுமதி அளிக்காமல் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராக செயல்படுவதாகவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சார்பில் தல்லாகுளம் பகுதியில் இருந்து பேரணி நடைபெற்றது. அப்போது வாகனங்கள் செல்வதற்கு காவல் துறையினர் தடை விதித்த நிலையில் பேரணியின் போது திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது அதற்கு உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழி விட்டபோது அதே பேரணி நடுவே மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் காரும் வந்ததால் சிறிது நேரம் சலசலப்பானது.
பேரணி நடுவே வந்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாற்று பாதையில் செல்லாமல் பேரணியின் நடுவே வருவது ஏன் எனவும், பேரணி நடப்பதை காவல்துறையினர் அறிவுறுத்த வில்லையா இல்லை காவல்துறையினர் கூறியும் பேரணி நடுவே ஆட்சியர் வந்தாரா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் மாவட்ட ஆட்சியரின் வாகனம் சென்ற சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.