மதுரை பி. பி. குளம்-முல்லைநகர் குடியிருப்போர் நலச் சங்கம் செயலாளர் பாண்டியராஜ் தாக்கல் செய்த மனு: பி. பி. குளம் நேதாஜி மெயின் ரோட்டில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் 5000 குடும்பங்கள் உள்ளன. பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அனுப்பினோம். பட்டா வழங்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் எங்களை வெளியேற்ற அரசு தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தோம். நீதிமன்றம், 'தகுதியானவர்களுக்கு ராஜாக்கூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அல்லது வேறு இடத்தில் மாற்று வசிப்பிடம் வழங்க வேண்டும், ' என உத்தரவிட்டது. மாற்று இடம் வழங்கவில்லை. எங்களை வெளியேற்ற பெரியாறு-வைகை பாசன உபகோட்ட உதவி பொறியாளர் நவ. 6 ல் நோட்டீஸ் அனுப்பினார்.
எங்களிடம் விசாரணை நடத்தவில்லை. விதிகளை பின்பற்றவில்லை. நோட்டீசிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மாற்று இடம் வழங்காமல் வீடுகளிலிருந்து வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு: பி. பி. குளம் கண்மாய் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 20 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இங்கு வசிப்போரில் தகுதியான 581 பேருக்கு ராஜாக்கூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மானிய விலையில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய அரசு முன்வந்தது. அங்கு செல்வதற்கு யாரும் முன்வரவில்லை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் நவ. 15க்கு ஒத்திவைத்தனர்.