மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மேலூரில் பொதுமக்களை சந்தித்து டங்ஸ்டன் விவகாரம் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் காரில் வந்த போது, மாட்டுத்தாவணி சிக்னல் அருகில் திரும்பும் போது பின்னால் காரில் வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மகன் நலந்த்குமார் மோதியுள்ளார். இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநருக்கும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மகனான நலந்த்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் கார் ஓட்டுநர் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தல்லாகுளம் காவல்துறையினர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மகன் நலந்த்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.