மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு தலைமை ஆசிரியா் திலகவதி தலைமை வகித்தாா்.
இதில், வாடிப்பட்டி குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நீதித் துறை நடுவா் எம். பி. ராம் கிஷோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
நவீன தொழில் நுட்பத்தால் இன்றைய உலகம் அதிவேக வளா்ச்சியடைந்து வருகிறது.
மாணவா்கள் தினந்தோறும் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அந்த செயலில் தோல்வி ஏற்படும் போது, மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
வாழ்க்கையில் சிறு, சிறு துன்பங்களை கண்டு துவண்டு விடக்கூடாது. அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை கூா்மையாக கவனிக்க வேண்டும். அதிலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். நல்ல நூல்களைத் தேடிப் வேண்டும். தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றாா்.
இதைத்தொடா்ந்து, காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், வழக்குரைஞா்கள், சட்டப் பணிக் குழுத் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.