மதுரை எஸ். எஸ். காலனியில் ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி விழா மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 ஆம் நாளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்துறை சாதனையாளர்களுக்கு 6 பேருக்கு ஸ்ரீ மஹா பெரியவா விருதுகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் அணுகுண்டு விழுந்ததைப் போல திமுக ஆட்சி அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் இதுவரை 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளன. 2021 - 26 திமுக ஆட்சி காலம் மிக மோசமான ஆட்சி காலம் என்பது மக்களின் நீங்கா நினைவாக அமையும்" என பேசினார். மேலும், "சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வீட்டுக்குப் போகும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டனர். எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எத்தனை திசை மாற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள், எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்கள் குழப்பமின்றி தெளிவாக உள்ளோம்" என கூறினார்.