மதுரை: ஆதரவற்ற முதியோரை மீட்க 'காவல் கரங்கள்' திட்டம் தொடக்கம்

55பார்த்தது
மதுரை: ஆதரவற்ற முதியோரை மீட்க 'காவல் கரங்கள்' திட்டம் தொடக்கம்
மதுரை மாநகரக் காவல் துறை சார்பில் மதுரை நகர் பகுதிகளில் ஆதரவற்ற, குடும்பத்தைப் பிரிந்த முதியோரை மீட்டு உணவு, இருப்பிடம் வழங்கி சேவை செய்யும் திட்டமான 'காவல் கரங்கள் திட்டம்' தொடக்க விழா நடைபெற்றது. 

மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் காவல் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து, கட்டணமில்லா தொடர்பு எண்ணை வெளியிட்டுப் பேசினார்: சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையராக நான் இருந்த போது கடந்த 2021இல் காவல் கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. 

தற்போது தமிழகத்தில் இரண்டாவதாக மதுரை மாநகரில் காவல் கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதரவற்ற முதியோர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அப்படி செல்ல விருப்பமில்லை என்றால், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் பராமரிக்கப்படுவார். 

இதற்காக 38 காப்பகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பங்கேற்பும் இருக்கும் வகையில், ஆதரவற்றோர் குறித்து காவல் கரங்கள் திட்டத்துக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லா எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பொதுமக்கள் 63698-60806 என்ற கைப்பேசி எண், 18008892098 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி