கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தக்கல் செய்த மனு: மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் நான் உட்பட ஏராளமாேனோர், ரூ. 100 கோடி வரை முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி முதலீட்டுத் தொகையை வட்டியுடன் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்த புகாரில் 2017ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு நீதிபதி சுதந்திரம் குழுவை நீதிமன்றம் நியமித்தது. அந்தக்குழு நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, நீதிமன்றம் ஏற்கனவே ஓய்வு நீதிபதி தலைமையில் பிரச்னையை தீர்க்க உத்தரவிட்டது. இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரணை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
எனவே, அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்தால் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து சொத்துகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றார்.