தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று(செப்.30) இரவு மதுரைக்கு வருகிறாா். உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலராக நியமிக்கப்பட்ட அடுத்த சில நாள்களில், மதுரையில் நடைபெற்ற திமுக மூத்த உறுப்பினா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். இதுவே, அவா் கட்சியின் பொறுப்புக்கு வந்த பிறகு பங்கேற்ற முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. இதேபோல, அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியும் மதுரையிலேயே நடைபெற்றது.
இந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியும் மதுரையில் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், மதுரையில் செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, அவா் திங்கள்கிழமை இரவு 7. 15 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறாா்.
தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக மதுரைக்கு திங்கள்கிழமை வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரளான தொண்டா்கள் கட்சிக் கொடியுடன் மதுரை விமான நிலையம் வருமாறு வடக்கு மாவட்ட திமுகச் செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி, மாவட்ட திமுகச் செயலா்கள் கோ. தளபதி (மதுரை மாநகா்), மு. மணிமாறன் (மதுரை தெற்கு) ஆகியோா் அழைப்பு விடுத்தனா்.