மதுரை, கே. கே. நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனைகளில் 7 டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களே நிரந்தர பணியில் உள்ளனர். இதுதொடர்பான வழக்கில், தகுதியான டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த கடந்த 2017ல் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, 6 ஆண்டுக்கு பிறகு, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் தற்காலிக அடிப்படையிலேயே தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 2, 050 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. 3 பேருக்கு ஒரு டயாலிசிஸ் தொழில்நுட்பனர் என்ற விகிதத்தில் பணியாளர்கள் இருக்க வேண்டும். பயிற்சி மாணவர்களை டயாலிசிஸ் செய்ய பயன்படுத்துவதால், நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தரமாகவும், தேவையான அளவுக்கும் டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன், சுந்தர்மோகன் ஆகியோர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்றனர். பின்னர் மனுவிற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.