மதுரை ஐராவதநல்லூா் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் முருகன். இவரது தாத்தா வைரவன். இவர் வண்டியூரைச் சேர்ந்த கே.ஆர். துரைராஜ் என்பவரிடம் இருந்து கடந்த 1993-ஆம் ஆண்டில் 18 செண்ட் நிலத்தை தனது பேரன் முருகன் பெயரில் வாங்கினார். இதைத்தொடர்ந்து, கடந்த 1998-ஆம் ஆண்டில் முருகன் பெயருக்கு மதுரை வடக்கு வட்டாட்சியர் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கினார். இந்த நிலையில் வைரவனுக்கு நிலத்தை விற்ற கே.ஆர். துரைராஜ் 2003-ஆம் ஆண்டில் காலமானார்.
இதையடுத்து, வருவாய்த் துறை ஆவணங்களை கணினிமயமாக்கும் போது, பட்டாவை துரைராஜ் பெயருக்கு தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையறிந்த வண்டியூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இறந்து விட்ட கே.ஆர். துரைராஜ் உயிரோடு இருப்பது போல ஆள் மாறாட்டம் செய்து, தனது பெயருக்கு நிலத்தை கிரையம் பெற்றுக் கொண்டு, அதை வேறு இருவருக்கு விற்பனை செய்தார். இந்த நிலையில், நிலத்தை மோசடியாக விற்றதை அறிந்த நில உரிமையாளர், புகார் அளித்தார்.
இதையடுத்து, ஆணையர் உத்தரவின் பேரில் மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் ராமசாமி, ஆள் மாறாட்டம் செய்த துரைராஜ், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி, தமிழ்செல்வன், முருகானந்தம், தெய்வநாதன், முத்து ஆகிய 9 பேர் மீதும் மோசடி, ஆள் மாறாட்டம், நில அபகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.