விருதுநகர் மாவட்டம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36) காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பாண்டிசெல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் பைக் மூலமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த காவலர் மலையரசன் மனைவி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்? என்பது தெரியாத நிலையில் அவரது உடலானது நேற்று மதியம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மலையரசன் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலையா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் மலையரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணையை விரைவாக நடத்தும் வரை உடலை பெற்று கொள்ள மாட்டோம் என உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனிப்படை காவலரான மலையரசன் சிறந்த காவலருக்கான சான்று பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.