மதுரை மாநகராட்சி துணைமேயரின் அலுவலகத்தின் அருகேயுள்ள ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதியதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை அமைப்பின் அருகே அமைக்கப்பட்டிருந்த மோட்டர் பம்ப் குழிக்குள் பணியாளர் ஒருவர் கயிறுகட்டி இறக்கிவிடப்பட்டு மோட்டார் சரி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறிதுநேரத்திலயே அதன் அருகிலே இருந்த மற்றொரு பழைய பாதாள சாக்கடை குழிக்குள் மாநகராட்சி பணியாளர் ஒருவரை கயிறு கட்டி உள்ளே இறக்கிவிட்டு பாதாள சாக்கடை குழிக்குள் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் பாதாள சாக்கடை குழிகளுக்குள் மனிதர்களை இறக்கி பணி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் துணை மேயர் நிற்கும் போதே பணியாளர் ஒருவர் பாதாள சாக்கடை குழிக்குள் கயிறுகட்டி இறக்கி விடப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதாள சாக்கடைக் குழிக்குள் பணியாளர் இறக்கப்பட்ட சிசிடிவி காட்சி தொடர்பாக மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் மோட்டார் பம்ப் இருக்கக்கூடிய குழிக்குள் தான் பணியாளர் இறக்கப்பட்டதாக கூறப்பட்டது.