வாடிப்பட்டி, அக்டோபர் 22: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இன்று(அக்.22) மதியம் நடைபெற்ற மின்சார விபத்தில் ஒரு கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம் (46) என்பவர், மதுரையில் உள்ள ஒரு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
இன்று பணிபுரிந்தபோது, கம்பிகளில் கிடந்த மின்சார வயரில் மின்சாரம் கசிந்துள்ளது. இதில் சிக்கிய ராஜாங்கம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.