கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஒட்டப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 220 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் குறைந்தது 8 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஒரு கணிப்பொறி ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியர் கடந்த ஒரு மாதம் முன்னர் பணி மாறுதல் பெற்று சென்றுள்ளார்.
இந்தப் பள்ளி கிராம பகுதியில் இருப்பதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதற்கு தயக்கம் அடைகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறை என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது.
பல்வேறு முறை கல்வித்துறைக்கு, மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஊர் பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் தாங்களும் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் விரைவில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என கூறியதை எடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.