கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆர். டி மலையில் வரும் 16ஆம் தேதி உழவர் திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக 63 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதை அடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஜல்லிகட்டு விழா கமிட்டியாளர்களிடம் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்தவொரு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தடுப்பு வேலிகள் பலப்படுத்துதல், சிசிடிவி கேமிரா பொருத்துதல், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த போட்டியில் 700 மாடுகள், 250 மாடுபிடி வீர்ர்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சரவணன், ஜல்லிகட்டு விழா கமிட்டி தலைவர் சங்ககவுண்டர், தோகைமலை சேர்மன் சுகந்தி சசிக்குமார், திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சின்னையன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கூட்டாக ஆய்வு செய்தனர்.