திருச்சி மாவட்டம்
முசிறி தாலுக்கா சின்ன காட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி
ஆண்டி மகன் தர்மலிங்கம் வயது 41. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மலைக்கோட்டை கிளையில் திருச்சியில் இருந்து பனையூர் வரை செல்லும் வழிதடத்தில் அரசு பேருந்து நடத்துனராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி அன்று வழக்கம்போல் பேருந்தில் பணியாற்றியபோது நெய்தலூர் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர் சேப்பலாப்பட்டி வரை டிக்கெட் எடுத்துவிட்டு பனையூர் வரை பயணம் செய்தது குறித்து நடத்துனர் தர்மலிங்கம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமரன் தனது நண்பர்களை வரவழைத்து நெய்தலூர் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் தர்மலிங்கத்தை குமரன் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுடன் தகாத வார்த்தையால் திட்டி கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து நடத்துனர் தர்மலிங்கம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.