தமிழகத்திலுள்ள டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்று கூறி, கடந்த 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முயன்ற, தமிழக பா. ஜ. , தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின், விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, 'டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டப்படும்; போராட்டம் தேதி சொல்லாமல் நடத்தப்படும், ' என்றும் பா. ஜ. , தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தின் பல இடங்களிலும் பா. ஜ. , வினர், டாஸ்மாக் கடைகள் முன் ஸ்டிக்கர் மற்றும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
அதேபோல இன்று கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை, இனுங்கூர், நெய்தலூர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்ட சென்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் நெய்தலூர் காலனி பகுதியில் அரசு மதுபானக்கடைக்கு 1000 கோடி டாஸ்மாக் ஊழல் செய்த திமுக அரசை பதவி விலக கோரி பாஜக தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜா பிரதீப் தலைமையில் ஊர்வலமாக டாஸ்மாக் கடை நோக்கி நூதன முறையில் தண்டூரா போட்டு ஸ்டாலின் புகைபடத்தை ஒட்ட சென்றனர். அப்போது குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் போராட்டம் செய்த வந்த 19 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதுவரை பாஜகவை சேர்ந்த 54 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்