கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கவுண்டம்பட்டி அண்ணா நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.
இந்த திருவிழாவிற்காக பெட்டவாய்த்தலையில் உள்ள பிரேம்குமார் என்பவரை நாட்டு வெடி பொருட்களை வெடிக்க வரவழைத்து உள்ளனர்.
அப்போது ஒரு நாட்டு வெடி வெடிக்காமல் அங்குள்ள குப்பை குழியில் கிடந்துள்ளது.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகன்களான அக்ஜித் (8), சஞ்சித் (6) மற்றும் தங்க மலையாளி மகள் மகாலட்சுமி (5), மகன் மணிமாறன் (8) ஆகிய நான்கு பேரும் இன்று காலை குப்பை குழியில் கிடந்த ஒரு நாட்டு வெடி பொருளை எடுத்து கல்லால் உடைத்து விளையாடியுள்ளனர். அப்போது அந்த வெடி எதிர்பாராத விதமாக வெடித்ததில் அக்ஜித், சஞ்சித் ஆகிய இரண்டு சிறுவருக்கும் கை, கால், தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தவர்கள் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
அருகில் இருந்த மகாலட்சுமி, மணிமாறன் இருவரும் லேசான காயத்துடன் முதல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து நங்கவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிக்காத நாட்டு வெடிப்பொருட்களை முழுமையாக அப்புறப்படுத்தாமல் விட்டதால் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது