கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூரை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி பார்வதி 50. இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். தான் வளர்த்து வரும் ஆடுகளை அருகே கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் தினமும் மேய்த்து வருவது வழக்கம்.
அவர் வழக்கம் போல் நேற்று மேய்த்துக் கொண்டிருந்தபோது கரையின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மின்வேலி அருகே மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
அப்போது ஆடுகளை காப்பாற்ற சென்ற பார்வதி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
அப்போது அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், அவ்வழியாக வந்தவர்கள் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்தனர். ஆனால் இரண்டு ஆடுகளும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பார்வதி அருகிலுள்ள இனுங்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் டிரான்ஸ்பார்மரை பூமியுடன் இணைக்கும் கம்பி மின்வேலியுடன் இணைக்கப்பட்டதால் மின்சாரம் பாய்ந்து இரண்டு ஆடுகள் உயிரிழந்ததாக பார்வதி என்ற பெண்ணுடன் ஆடு மேய்க்க சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவம் தெரிவித்துள்ளார்.