கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பிடமங்கலம் கிழக்குகேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 78). இவர் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அவருக்கு குணமடையவில்லை.
இந்நிலையில் ஜனவரி 5ஆம் தேதி மாலை 5 மணி அளவில், அவரது வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது மகன் ஜீவானந்தம் வயது 43 என்பவர், தனது தந்தை வெங்கடாசலம் வழக்கமாக செல்லும் இடங்களில் சென்று தேடிப்பார்த்துள்ளார். பிறகு, அவர்களது உறவினர்கள் வீட்டில் சென்று விசாரித்துள்ளார். ஆயினும், அவரது தந்தை குறித்த எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால், தனது தந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மாயமான வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர்.