கரூரில் 4-ஆண்டுகள் ஆகியும் வேளாண் கல்லூரி அமைக்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் கரூரில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.
ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேளாண் கல்லூரியை கரூரில் திருமண மண்டபத்தில் துவக்கினர். பிறகு கல்லூரிக்கு இடத்தேர்வு நடைபெற்று வருவதாகவும், தேர்வு செய்த பிறகு அங்கு கல்லூரி அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்தனர். ஆனால் 4-ஆண்டுகளாகியும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமண மண்டபத்தில் கல்லூரி தொடர்ந்து செயல்படுவதால், மாணவ - மாணவிகளுக்கு களப்பயிற்சி என்பது கனவு பயிற்சியாகவே உள்ளது.
மேலும் அந்த மண்டபத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவாக்கர்கள் சாலை மறியல் போராட்டத்தில் 2- முறை ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் பேரில் இன்று கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி & எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, வேளாண் கல்லூரி அமைக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.