கரூர் மாவட்டம், கருப்பத்தூரில் கடந்த 6ம் தேதி இரவு நாகராஜ் என்பவருக்கும், சங்கர் @ வெட்டு சங்கர் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சங்கர் என்பவர் வாழை இழை அறுக்கும் அரிவாளின் பின்பக்கத்தினால் நாகராஜின் வலது பக்க தலையில் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக நாகராஜ் அளித்த புகாரில், லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மறுநாள் பிப்ரவரி 7-ல் சங்கரை லாலாபேட்டை காவல்துறையினர் பிள்ளாபாளையம் அருகே கைது செய்ய முற்பட்டபோது, வெட்டு சங்கர் தப்பிக்க முயற்சி செய்து பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில், இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று சங்கருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
தொடர்ந்து வெட்டு சங்கர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து அளித்த புகாரில், கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் வெட்டு சங்கரின் உடலுக்கு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நேற்று இரவு நடைபெற்றது. பரிசோதனையின் முடிவில் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.