கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன் தலைமையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மோட்டார் வாகனங்களை இயக்குகின்ற ஓட்டுனர்களுக்கு கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டும். உடல் நலம் சீராக இருக்க வேண்டும். இது இரண்டும் சீராக இல்லாத சூழலில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, ஓட்டுனர்களின் உடல்நலத்தை பேணுகின்ற வகையில் இது போன்ற மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ஓட்டுநர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (ஜனவரி 10) நடைபெற்ற மருத்துவ முகாமில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் ஆட்டோ, கார், லாரி, பேருந்து ஓட்டுநர்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், அலுவலர்கள் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.