டாஸ்மாக் மதுபான கடையால் விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆபத்து. பிஜேபி சார்பில் ஆட்சியரிடம் மனு.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கரூரை அடுத்த நெரூர் தென்பாகம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை மது விற்பனை கடையால் பல குடும்பங்கள் சீரழியும் நிலை தொடர்ந்து வருகிறது.
இப்பகுதியில் விவசாயக் கூலி வேலை தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதால், கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் மேற்படி டாஸ்மாக் கடையில் குடித்து இழந்து விடுகிறார்கள்.
மேலும், அருகில் உள்ள பள்ளி மற்றும் வழிபாட்டு கோயில்களுக்கு மிகவும் அச்சுறுத்தல் ஆகவும், இடையூறாகவும் இந்த மதுபான கடை இயங்கி வருகிறது என்றும், மது பாட்டில்களை வாங்கிச் சென்று, குடித்துவிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாய்க்கால், வரப்பு பகுதிகளில் மது பாட்டில்களை உடைத்து எறிந்து விட்டு செல்கின்றனர்.
இது விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும், பொது மக்களுக்கும் ஆபத்தாக உள்ளது.
உடனடியாக இந்த மதுபான கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.