இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கிப்ஸன் என்பவர் கரூரை அடுத்த கோதூரில் சுமார் 07 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக கரூரைச் சேர்ந்த R. S. ராஜா என்ற நில தரகரிடம் முன்பணம் ரூ. 96,00,000/- கொடுத்து ஒரு மாத காலத்திற்குள் கிரையம் செய்துவிடுவதாக கூறியவர், கிரையம் செய்ய காலதாமதம் செய்ததால் நில உரிமையாளர்கள் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர்.
இதனால் மேற்படி பணம் ரூ. 96,00,000/- த்தை திரும்ப பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுத்தபோது அவர் அதை வாங்க மறுத்து தனக்கு பணம் வேண்டாம், நிலம்தான் வேண்டும் என்று தென்மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவரை அழைத்து வந்து மத்தியஸ்தம் செய்துள்ளார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையறிந்த வாங்கலை சேர்ந்த பாலமுருகன் இந்த விஷயத்தை முடித்து தருவதாக R. S. ராஜாவிடம் கூறியதை நம்பி கரூர் வழக்கறிஞர் ரகுநாதன் மூலமாக பணம் ரூ. 96,00,000/- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற பாலமுருகன் ஏமாற்றியதால் ரகுநாதன் பணத்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்டும் திருப்பி தராததால் கரூர் SP யிடம் கொடுத்த புகாரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, பாலமுருகனை இன்று காலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.